எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஓலா, லாப வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஓலா, கடந்த சில மாதங்களாக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2,000 ஊழியர்களை ஓலா பணிநீக்கம் செய்தது.
அதுமட்டுமின்றி பவிஷ் அகர்வாலின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜினாமா செய்தனர். இந்த மாத தொடக்கத்தில், ஓலா எலெக்ட்ரிக் அதன் இரண்டாவது காலாண்டில் ரூ.495 கோடி நிகர இழப்பை பதிவு செய்தது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.524 கோடியாக இருந்தது. ஆனால் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அது ரூ.347 கோடியில் இருந்து விரிவடைந்தது.
ஓலா நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர்களின் புகார்கள் குவிந்ததால், அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், புகார்கள் சரி செய்யப்பட்டதாகவும், அதன் விற்பனை மற்றும் இணைந்த சேவை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நிறுவனத்தின் சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் கூறப்படும் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.