ஏழு வயது சிறுவனுக்கு வேலை வழங்கிய ரஷ்ய IT நிறுவனம்

ஐடி கோடிங்கில் அதீத திறமை கொண்டுள்ள ஏழு வயதான ஒரு சிறுவனை, வேலைக்குச் செல்ல தகுதியான வயது வந்தவுடன் தங்களது மேலாண்மை குழுவில் சேர ரஷ்ய மென்பொருள் நிறுவனம் ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

ரஷ்ய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்த சேர்கே, தனது ஐந்து வயதிலிருந்தே மென்பொருள் கோடிங் முறைகள் குறித்து விளக்கும் வீடியோக்களைப் பதிவேற்றி தனக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளார்.

அந்த வீடியோக்களின் அடிப்படையில், தகவல் பாதுகாப்பு நிறுவனமான ‘Pro32’ , அச்சிறுவனுக்கு கார்ப்பரேட் பயிற்சித் தலைவர் பதவிக்கான வேலைவாய்ப்பை வழங்கி, அதற்கான எழுத்துப்பூர்வ கடிதத்தை அனுப்பியது.

ரஷ்ய சட்டத்தின் கீழ், சேர்கே தனது 14 வயது வரை ஊதியம் பெறும் எந்தப் வேலையையும் ஏற்க முடியாது. Pro32 நிறுவனம் சேர்கேக்கு 14 வயதாகும் வரை காத்திருக்க வேண்டும்.

சேர்கேக்கு 14 வயதாகும் வரை, தங்கள் நிறுவனமும் சேர்கேவும் இணைந்து செயல்படுவதற்கான வழிகள் குறித்து அவரது பெற்றோரிடம் பேசி வருவதாக Pro32 இன் தலைமை நிர்வாகி இகோர் மண்டிக் பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார்.

“Pro32 நிறுவனத்தின் அறிவிப்பால் சேர்கேவின் தந்தை, கிரில், ஆச்சரியமடைந்துள்ளார். தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சேர்கே அந்த நிறுவனத்தில் பணியில் சேரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்,” என்கிறார் Pro32 இன் தலைமை நிர்வாகி.

அவரது வீடியோக்களில், சேர்கே புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் புன்னகைக்கிறார். ரஷ்ய மொழியிலும் சில சமயங்களில் உடைந்த ஆங்கிலத்திலும் பேசும் அவர், கோடிங் சவால்களை படிப்படியாகக் விளக்கிச் செல்கிறார்.

அவரது யூடியூப் சேனலில் 3,500 க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். புரோகிராமிங் மொழிகளான “பைதான் மற்றும் யூனிட்டியைக்” கற்றுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளவர்களும், பல செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை ( Artificial intelligence tools) அடிப்படையாகக் கொண்ட நெட்வொர்க்குகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புவர்களும் இவரது சேனலை பின்தொடர்கிறார்கள்

“கோடிங்கில் மட்டுமல்ல, அவற்றை கற்பிப்பதிலும் தனித்துவமான திறன்களைக் கொண்டுள்ளார் சேர்கே. என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு கோடிங் மொசாட்டை போன்றவர். சேர்கே 14 வயதை எட்டும்போது, அவர் கோடிங் கற்பிப்பதிலும் , அந்த துறையில் வல்லுநராகவும் இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அதனால்தான் அவர் பணியில் சேரும் நாளை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,” என்று மண்டிக் கூறினார்.

மாஸ்கோவைத் தளமாகக் கொண்ட Pro32 இல் பணியாற்றும் கோடிங் செய்பவர்கள் மட்டுமல்ல விற்பனையாளர்கள், கணக்காளர்கள் மற்றும் பலரும் சேர்கேவிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் மண்டிக் கூறினார்.

சேர்கேவுக்கான ஊதியம் தொடர்பாக எந்த வாக்குறுதியையும் , Pro32 நிறுவனம் இதுவரை அளிக்கவில்லை.