அதானிக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றத்தில் முறைப்பாடு

கையூட்டல் வழங்க முயன்றதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் இந்திய முன்னணி பணக்காரர் கௌதம் அதானி (Gautam Adani) மீது நியூயோர்க் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது

சூரிய சக்தி மின்சார ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்திய அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் தர முயற்சித்ததன் மூலம், 2100 கோடி ரூபாய் முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாக, இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டில் இது தொடர்பாக அமெரிக்க எப்பிஐ நிறுவனம்,அதானியின் உறவினரான சாகர் அதானியின் நியூயோர்க் வீட்டில் சோதனையை நடத்தியிருந்தது. இந்தநிலையில் நீதிமன்ற முறைப்பாட்டில் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அதானி, அமெரிக்கா முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாகவும், அவர்களிடம் உண்மைகளை மறைத்துவிட்டதாகவும் இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் அவரின் (Adani Green Energy Ltd) 12 கிகாவோட் மின்சாரம் தயாரிப்பதற்கான சூரிய ஒளி திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்காக பல கோடிகளை அவரின் நிறுவனம் கையூட்டலாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளது. இந்தநிலையில், குறித்த திட்டத்தில் பல மில்லியன் டொலர்களை முதலீடு செய்த அமெரிக்க நிறுவனங்களிடம் உண்மையை மறைப்பதற்காக, 265 மில்லியன் டொலர்களை அதானி குழுமம் கையூட்டலாக கொடுக்க முயன்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த முறைப்பாட்டின்படி, கௌதம் அதானிக்கு நியூயோர்க் நீதிமன்றம் பிடிவிறாந்தை பிறப்பித்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அதானி உலகின் 19வது பணக்காரர் ஆவார், இதன் மொத்த சொத்து மதிப்பு சுமார் 85.5 பில்லியன் டொலர்களாகும்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதி ஆராய்ச்சி நிறுவனமான ஹின்ட்பேர்க், அதானி மற்றும் அவரது நிறுவனம், கணக்கியல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.